நடிகர் – திரைக்கதை எழுத்தாளர் – இயக்குனர் : மகொன் ப்ளெய்ர்


-ஆண்டர்சன் மூர்

மகொன் ப்ளெய்ர் முன்பு நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர். இவரது முதல் சுயாதீன திரைப்பட முயற்சியான I Don't Feel at Home in This World Anymore திரைப்படம், பரவலான பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறது. தன் முதல் திரைப்படப் பணியின்பொழுது தான் அறிந்துகொண்ட நுட்பங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

நீங்கள் நடித்த சில படங்களைப் பார்த்திருக்கிறோம், வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளீர்கள். முதன்முறையாக I Don't Feel at Home in This World Anymore படத்தை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?

மகொன் ப்ளெய்ர்: கடந்த காலங்களில் நான் திரைக்கதையை மட்டும் எழுதி, அதை விற்றுவிடுவேன். அப்படத்தை மற்றவர்களை வைத்தே இயக்க முயற்சித்தேன். எழுதியவன் நானாக இருந்தாலும், அதை இயக்கியவர்கள் வேறொருவராகவே இருந்தனர். ஆனால், I Don't Feel at Home in This World Anymore இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இதன் திரைக்கதையை எழுதுகிறபொழுதே, இப்படத்தை நான் தான் இயக்கப்போகிறேன் என்று தெரிந்தேதான் எழுதினேன். இதுதான், மற்ற திரைக்கதைகள் எழுதும்பொழுதும், இத்திரைக்கதையை எழுதும்பொழுதும் நான் உணர்ந்த மிகமுக்கியமான வேறுபாடு. எழுதுகிறபொழுது இந்நினைப்பு இருந்தாலும், என்னால் டைரக்‌ஷன் சார்ந்த பணிகளை முழுமையாகச் செய்துமுடிக்க முடியுமா? என்பது தெரியாது, ஆனால், குறைந்தது, இந்தக் கதையை நானே இயக்க வேண்டும் என்பதே அப்போதைய என் நோக்கமாக இருந்தது. 

Image result for macon blair
Figure 1Macon blair

விற்பனை செய்வதற்காக நீங்கள் திரைக்கதைகளை எழுதுகிறபொழுது, எழுதியதோடு உங்கள் கடமை முடிந்துவிடும். அதற்காக மட்டுமே நீங்கள் பயன்படுகிறீர்கள். அத்தோடு திரைக்கதைக்கும் உங்களுக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அத்திரைக்கதை மற்றொரு இயக்குனர் கைகளுக்குச் சென்றுவிட்டால் அது அவரது பொறுப்பின்கீழ் வந்துவிடுகிறது. ஆனால், நீங்கள் திரைக்கதை எழுதுகிறபொழுது, அதனோடு மிகவும் நெருக்கமாக உறவாடுகிறீர்கள், அக்கதாபாத்திரங்களோடு நெருங்கிப்பழகியிருக்கிறீர்கள், திரைக்கதையின்பால் அதிக ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள் என்பது தெரியும் – அதை விற்றுவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றபோதும் – விற்றபின்பு முற்றிலும் அது உங்கள் கைகளில் இல்லை. எதையும் விற்பனை செய்கையில், அதற்கு நான் எப்போதுமே மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அத்தருணத்திற்குப் பிறகு இயக்குனர் அதில் என்ன செய்ய விரும்புகிறாரோ அது நல்லது. அவரும் அத்திரைக்கதையிலிருந்து சிறந்தவொன்றை உருவாக்கவே விரும்புகிறார். அதேதான் நான் எழுதிய இந்தத் திரைக்கதையிலும் நடக்கிறது. இயக்குகிறபொழுது, திரைக்கதையை எவ்வளவு சிறப்பாக காட்சியமைக்க முடியும் என்பதைக் குறித்தே செயல்படுகிறேன். 

நான் எழுதிய திரைக்கதையை நானே இயக்குறேன் என்பதில், இது ஒரு விதத்தில் எனக்கு உற்சாகமாகவும், சுதந்திரமாகவும் உணரவைத்தது. மறுபுறம், எழுத்திலிருந்து திரைக்கு மாற்றுகையில், அதற்கான ஷாட் தேர்வு போன்றவற்றையும் நாமே மேற்கொள்ள வேண்டும். அடுத்து, இது ஒருவேளை சரியாக எடுபடாமல் போனால், வேலை செய்யாவிட்டால் உங்களைத் தவிர, அங்கு குறைகூற யாருமே இல்லை என்பதுதான் கூடுதல் அழுத்தம். நான் இந்த எண்ணங்களில் முன்னும் பின்னுமாகப் பந்தாடப்பட்டேன், ”இது மிகவும் சிறப்பானது, இதில் நான் என்ன வேண்டுமானலும் செய்யலாம்!” என்பதற்கும், “ஓ, நான் என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும்… அதற்குத் தயாராகயிருக்க வேண்டும்” என்பதற்கும் இடையில் ஊசலாடினேன்.

Image result for macon blair

இந்த ஸ்கிரிப்டை நீங்கள்தான் இயக்கப்போகிறீர்கள் என்பதை அறிந்துகொண்டதும், பின்னர் அதை எழுதும் செயல்முறை குறித்து விரிவாகக் கூற முடியுமா? இதை நீங்கள் “மிதமாக வேகவைத்த” குற்றத் திரைப்படப்பாணி என்று வகைப்படுத்தியுள்ளீர்கள். எனில் எழுதுகையில் plot-உடன் (கதைக்களத்துடன்) துவங்கினீர்களா? அல்லது இத்திரைப்படம் என்னவகையான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தொனியை மட்டும் உங்கள் நினைவில் வைத்திருந்தீர்களா?

கதையின் உண்மையான plot (கதைக்களம்) தெரிவதற்கு முன்பே, என் மனதில் அந்த ஒட்டுமொத்த திரைக்கதை வெளிப்படுத்த வேண்டிய உணர்வும், திரைப்படத்திற்கான தொனியும் மட்டுமே என் மனதில் இருந்தது. இதன் அடிப்படையில்தான் அடுத்தடுத்து கதைக்கான சம்பவங்கள் மற்றும் கதைக்களத்தை விவரித்து எழுதினேன். அதாவது கதை எந்தவிதத்திலெல்லாம் பயணிக்க வேண்டும் என்பதற்கான மையச்சரடு என்னிடம் இருந்தது, அத்தோடு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைக்கான சம்பவங்களும், ஐடியாக்களும் இருந்தன, மேலும் ஒரு கதாபாத்திரம் எப்படித் தோன்றவேண்டும் என்பதற்கான மனச்சித்திரத்தையும் வைத்திருந்தேன். 

இவையெல்லாம் தெளிவற்ற பிம்பங்களாக இப்படம் குறித்து என் மனதிலேயே வைத்திருந்தேன். எனினும் இவை ஒரு நியமிக்கப்பட்ட வடிவ ஒழுங்குக்குள் இன்னும் அடங்கவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துண்டிக்கப்பட்ட சம்பவங்களாகவே இருந்தன. ஆனால், இவற்றை வைத்து நான் ஒரு க்ரைம் ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்போகிறேன் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்திருந்தேன். அதே நேரத்தில் கடினமான, கெடுதல் நிறைந்த, மிகக்கொடூரமான கதாபாத்திரங்களைக் கொண்ட வகைமையில் ஒரு குற்றத் திரைப்படப் பாணியாக இந்தப் படத்தையும் உருவாக்க விரும்பவில்லை. மாறாக இத்திரைப்படம் மென் நகைச்சுவையையுடனும், வேடிக்கத்தன்மையோடும் இருக்க வேண்டும் என்றே விரும்பினேன். இது ஒருவகையில் இனிமையும், சோகமும் கலந்த திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதில் வருகிற கதாபாத்திரங்கள் தீயவர்களாக இருந்தாலும், அம்மக்களும் ஓரளவு விரும்பத்தக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். எனவே, இதைச் சுருக்கமாகக் கூற ஒரு வழியைப் பற்றிச் சிந்திக்க முயற்சிக்கிறபொழுதுதான், இதை ஏன் ஒரு soft-boiled crime படமாக உருவாக்கலாமே! என்ற எண்ணம் தோன்றியது. இது அடிப்படையில் ஒரு துப்பறியும் கதையாகத்தான் விரிகிறது. ஆனால், எல்லோருடைய உணர்திறன், அது எளிதில் மிகவும் பயமுறுத்துகிறது. 

இந்த அதிர்வுகள் அனைத்தையும் நான் ஒரே திரைப்படத்தில் பெற விரும்பினேன். இதுவும் பட உருவாக்கம் சார்ந்த சிந்தனையின் ஒரு பகுதியாக இருந்தது. இதற்கு அடுத்து, இரண்டாவது படம் எடுப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அடுத்தபடம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாதபொழுது, எல்லாவற்றையும் இந்த ஒரு படத்திலேயே செய்துபார்த்துவிட விரும்புவோம். அந்த எண்ணமும் இதில் இருந்தது. நான் கண்டுபிடித்தேன், “ஓ., ஷிட், இந்த ஒரு திரைப்படத்திலேயே நான் செய்ய விரும்பிய அனைத்தையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். மேலும், இதன் வரிசையில் அடுத்து ஒரு நகைச்சுவை அல்லது ஒரு காதல் திரைப்படத்தை என்னால் எடுக்கமுடியும் என்ற நினைக்கவில்லை.”

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பணிபுரிய மெலனி லின்ஸ்கி மற்றும் எலிஜா வுட் என்ற இரு திறமையான நடிகர்களைக் கொண்டிருந்தீர்கள். நீங்களும் ஒரு நடிகர் என்பதால், உங்களுக்கு நீங்களே எப்படி நடிக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், உங்களுக்கு ஒரு நடிகரை எப்படி இயக்குனரின் இடத்திலிருந்து இயக்குவது என்பது எப்படி இருந்தது?

Figure 2 Elijah Wood and Melanie Lynskey

நேர்மையாகச் சொல்வதென்றால், நடிப்பை அணுகுவதற்கான சிறந்த வழி என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. நடிப்பு சார்ந்து நான் எதையாவது கற்றுக்கொண்டேன் என்று சொல்லவேண்டுமானால், நடிப்பில், தான் எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதில், ஒவ்வொருவரும் ஒரு சொந்த பாணியைக் கொண்டிருக்கிறார்கள். நடிப்பில் ஒரு சிலர் தகுந்த கதாபாத்திரத்தை வெளிக்கொணர்வதற்காக கணக்கற்ற முறையில் முன் ஒத்திகையில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்போதுதான், சிறு சிறு விஷயங்களைக் கூட மிக அழுத்தமாகவும், தெளிவாகவும் உணர்ச்சிகளாக வெளிக்கொண்டுவர முடியுமென நினைக்கிறார்கள். அதன்படியே ஒத்திகைகளிலும் அதிக முனைப்பு காட்டுகிறார்கள். மற்றவர்களோ நடிப்பு என்பது யதார்த்தமான அணுகுமுறை. எனவே, நடிக்கிறபொழுது, அது அந்தக் கதாபாத்திரமாகவே ஆர்கானிக் வழிமுறையில் திறக்க விரும்புகிறார்கள். 

ஒரு இயக்குனராக கதாபாத்திரத்தின் முன் வாழ்க்கை, மற்றும் அவர்களது நடிவடிக்கைகள் சார்ந்து போதிய கவனம் கொண்டிருக்க வேண்டும். அதன்படி, அவர்களின் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள், தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள், கதாபாத்திரமாக அந்நடிகர்கள் எதை உணரவேண்டும், போன்றவற்றைக் குறித்தெல்லாம் நான் சில கூடுதல் ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்தேன். அடுத்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு மெலனி மற்றும் எலிஜாவுடன் நீண்ட உரையாடல் வைத்துக்கொண்டேன். கதாபாத்திரங்கள் சார்ந்தும் கதை சார்ந்தும் இரு தரப்பிலிருந்தும் உரையாடினோம். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நான் அவர்களிடம் கேட்டறிந்துகொண்டேன். 

என் உணர்வு இதுதான்: அவர்கள் 25 வருட தொழில்வாழ்க்கையைப் பெற்றுள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அவர்களுக்கு ஏற்கனவே தெரியாத எந்தவொரு முழு விஷயத்தையும் நான் அவர்களிடம் சொல்ல முடியாது. எனவே, என்னிடமிருந்து அவர்களுக்கு என்னவகையான உள்ளீடுகள் தேவை என்று அவர்களிடம் கேட்டேன், பின்னர் அவர்களின் வழியிலிருந்து விலகியிருக்க முயற்சித்தேன். நாங்கள் செல்லும்போது சிறிய மாற்றங்களைச் செய்வோம், ஆனால், நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன்பே இந்த முழுமையான உரையாடல்களைக் கொண்டிருந்தோம். பின்னர் நாங்கள் இறுதியாக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்ததும், நான் அவர்களுக்கு அதிகப்படியான சுமையைக் கொடுக்க முயற்சிக்கவில்லை, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட செயல்களைச் சரியாகச் செய்வார்கள் என்றே நம்பினேன். அதுதான் நடந்தது. 
சில நேரங்களில் நான் மிகவும் உற்சாகமடைவேன், ஏனென்றால் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகுந்த தன்னிறைவைத் தருவதால், அதிக மகிழ்ச்சியடைவேன். எனவே, இதற்கு முன் எடுக்கப்பட்ட காட்சி எப்படி வந்திருக்கிறது? என்றும் அவர்களுடன் கலந்து பேச விரும்புவேன். நாம் ஏற்கனவே படம்பிடித்திருக்கிற காட்சிகளைக் குறித்து உரையாடலைத் துவங்க நினைப்பேன். ஆனால், அவர்களோ, “இல்லை, இல்லை, நாங்கள் அடுத்த காட்சிக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்” என்பதுபோல அவர்களது செயல்கள் அமைந்திருக்கும். 

நாம் இப்போது எடுத்த காட்சி எனக்கு ஏன் மிகவும் சிறப்பாகத் தோன்றுகிறது என்பதைப் பற்றி நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னாலும், ”நாம் அதைப் பற்றி பின்னர் பேசுவோம், இப்போது எடுக்க வேண்டிய அடுத்த காட்சியில் கவனம் செலுத்துவோம்!” என்றுதான் அவர்கள் என்னிடம் சொல்லவேண்டியிருந்தது. எடுத்து முடிந்த காட்சிகளைக் காட்டிலும், எடுக்கப்போகிற காட்சிகளின் மீது, நடிகர்களாக அவர்கள் மிகுந்த அக்கறை செலுத்தினர். 

Image result for macon blair larkin seiple

ஒளிப்பதிவாளருடன் உங்கள் உறவு எப்படியிருந்தது? படத்தின் தோற்றமும், உணர்வும் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்?

ஒளிப்பதிவாளரான லர்கின் செபில் (Larkin Seiple), ஒரு உயிர்காப்பாளாராகச் செயல்பட்டார். எங்கள் இருவருக்குமிடையில் நிறைய உரையாடல் நிகழ்ந்தது. நாங்கள் இருவரும் ஒரே ஊரில் வசிக்கவில்லை என்றாலும், படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முன்பு, படம் குறித்தும், காட்சியமைப்பு குறித்தும் தொலைபேசியின் வாயிலாகவே பல மாதங்கள் பேசினோம். அவ்வாறே அவரை படப்பிடிப்பிற்குத் தயார்படுத்தினேன். படம் குறித்து என் சிந்தனைகளைத் தெரியப்படுத்தினேன். தொனியில் இல்லாவிட்டாலும், இந்தப் படத்தின் தோற்றத்தோடு ஒத்துப்போவதுபோல இருக்கிற, நான் நினைக்கிற நிறைய திரைப்படங்களை அவருக்குப் பரிந்துரைத்தேன். அப்படங்களைப் பார்ப்பதன் மூலம், காட்சியியல் தோற்றம் குறித்த ஒரு சிந்தனையை எட்ட முடியும். திரைக்கதை முடிந்தபின்னர், ஒவ்வொரு காட்சிக்கும், இரண்டு வாரங்கள் ஷாட் லிஸ்டிங் பணியினை மேற்கொண்டோம். 

Image result for macon blair larkin seiple

செயல்திறன் மற்றும் எழுத்தின் பின்னணியிலிருந்து நான் இதற்குள் வந்தேன். என் அடிப்படையான தொழில்நுட்பத் தளம் ஜெர்மி சால்னியர் (Jeremy Saulnier) போல அத்தனை வலுவானதல்ல. உதாரணத்திற்கு, ஒளிப்பதிவுப் பின்னணியிலிருந்து இயக்குவதற்கு வந்தவன் அல்ல நான். ஒளிப்பதித்துறையிலிருந்து திரைப்படம் இயக்க வருபவர்களுக்கு, அச்சினிமா தொழில்நுட்பத்தின் அடிப்படைகளான லென்ஸ்கள், லைட்டிங் செட் அப்கள், மற்றும் இதுபோன்ற தொழில்நுட்பக் கூறுகளைப் பற்றி முன்பே பரிச்சயங்கள் இருந்திருக்கும். எனவே, அவர்கள், தான் இயக்குகிற படத்திற்கு இன்னொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்கையில், அவர்கள் அந்தத் தொழில்நுட்ப தளம் குறித்து விரிவாகப் பேசக்கூடும். ஆனால், நான் நடிகன் மற்றும் திரைக்கதை எழுதுதல் எனும் பின்புலத்திலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு இதுசார்ந்த பரிச்சயம் என்பது மிகக் குறைவு. எனவே, நான் என் ஒளிப்பதிவாளர் லர்கினுடன் படத்தின் தொனி மற்றும் அது வெளிப்படுத்த வேண்டிய உணர்வு குறித்துதான் அதிகம் உரையாடுவேன். மேலும், இதில் படத்தின் இறுதியில் எடிட்டிங் என்னவாக இருக்க வேண்டும், அதற்கேற்ற காட்சியமைப்பு என்பதில் சில உள்ளீடுகளைத் தருகிறேன். கட் பாய்ண்டுகள் கவரேஜில் வேலை செய்வது பற்றி நாங்கள் நிறைய பேசினோம், இதனால் அது குளுமையான காட்சிகளைப் பிடிப்பது மட்டுமல்ல, இது இறுதியில் படத்தொகுப்பில் எவ்வாறு வெட்டப்படப் போகின்றன என்பதையும் நோக்கிக் கவனிக்கிறோம். சில நேரங்களில் படப்பிடிப்பு சார்ந்து முன்பே திட்டமிடப்பட்டவை கைகொடுக்காத தருணங்களில் அவற்றை சன்னலுக்கு வெளியே தூக்கியெறிந்துவிட்டு, படப்பிடிப்புத் தளத்தில் காட்சிகளை மேம்படுத்தி அப்படியே சென்று படப்பிடிப்பைத் தொடர வேண்டும். ஆனால், அதுமாதிரியான சந்தர்ப்பங்கள் சொற்பமாகவே நிகழ்ந்தன. பெரும்பாலும், நாங்கள் முன்பே உருவாக்கிய படப்பிடிப்புத் திட்டங்களோடு இணைந்தே வேலைசெய்ய முடிந்தது. 

விஷயங்களை வடிவமைக்க உதவும் விதத்தில், நான் லர்கினை பெரிய வழியில் நம்பினேன். தொனி மற்றும் உணர்ச்சியின் அடிப்படையில் நான் பேசுவதை அவரால் புரிந்துகொள்ள முடியும். மேலும் நான் வார்த்தைகளாகச் சொன்னவற்றை லென்ஸ்கள், லைட்டிங்க், வண்ணப்பயன்பாடு, போன்ற பல விஷயங்களின் உதவியோடு, காட்சியாக அதை மொழிபெயர்த்துக் காட்டினார். எனவே, இப்படத்தில் அவர் ஒரு ஒளிப்பதிவாளராக மட்டும் வேலை செய்யவில்லை. அவர் ஒரு இணை இயக்குனர் எனும் அளவிற்கு, என்னுடன் ஒத்துழைத்து, சிறப்பான பங்களிப்பை நல்கினார். 

திரைப்படத் துறையில் வர விரும்புகிறவர்களுக்கும், ஆர்வமுள்ள திரைப்பட இயக்குனர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புகிற சிறந்த ஆலோசனை என்ன?

திரைப்படம் இயக்கும் பணியில், நீங்கள் மட்டுமல்ல ,ஒரு குழுவும் இணைந்தே உழைக்கிறது. அவர்களும் உங்கள் கனவிற்காக மெனக்கெடுகிறார்கள். எனவே, உங்கள் படக்குழுவினருக்கு நன்றாக உணவளிக்கப்படுவதை முதலில் உறுதிப்படுத்துங்கள். சிறிய பட்ஜெட் படம் என்பதால், போதிய பணம் தரமுடியாமல் போகலாம். நீங்கள் அவர்களுக்குப் பணம் செலுத்துகிறீர்களோ, இல்லையோ, அக்குழுவினருக்கு நல்ல சூடான, ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மன உறுதியைக் காக்க நீங்கள் எதையும் செய்ய முடியும் என்பதுதான் திரைப்படத்தில் நீங்கள் நீண்டகாலம் பயணிப்பதற்கு நன்றாக உதவி செய்யும். 

நன்றி: nofilmschool